ஈரோடு: தீபாவளி பரிசாக பெருந்துறை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மானிய விலையில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான ஜெயக்குமார் வழங்கி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில், புதிய இருசக்கர வாகனம் வாங்க விரும்புவோரை ஊக்குவிக்கும் வகையில் டி.வி.எஸ் நிறுவனம், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரோடு ஒப்பந்தம் ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒவ்வொரு புதிய டி.வி.எஸ் வாகனத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.
பெருந்துறை சட்டமன்ற அலுவலகத்தில் இதற்கான முகாம் நடைபெற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் புதிய இருசக்கர வாகனங்களை வாங்க விண்ணப்பித்து இருந்தனர். அந்த வகையில், இவர்களுக்கு வங்கி நிதி உதவி ஏற்பாடு செய்து, முதல் கட்டமாக 300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு வாகன விலையிலிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் பதிவு கட்டணம் ரூ.3 ஆயிரத்து 500 ஆகியவை மானியமாக வழங்கியதோடு, முன்பணமும் இல்லாமல் வாகனம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (நவ.19) ஜே.கே ட்ரேடர்ஸ் அலுவலகத்தில் நடந்த விழாவில் முதல் கட்டமாக 300 பயனாளிகள் புதிய இருசக்கர வாகனத்தைப் பெற்றுக் கொண்டனர்.