ஈரோடு: பெருந்துறை அருகே கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிக்க முயன்றபோது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு குறித்து, சம்பவ இடத்தில் பெருந்துறை போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில், கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பிரமணியம் என்ற நபரை, நெல்லை குற்றத் தடுப்பு தனிப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீரானபுரம் குள்ளம்பாளையம் விவசாயத் தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கி இருப்பதாக, நெல்லை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில், தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து சிவசுப்பிரமணியத்தை பிடிக்க முயன்றபோது, சிவசுப்பிரமணியத்தின் கூட்டாளிகளான முத்து, மணிகண்டன், கஜேந்திரன், வசந்தகுமார் உள்ளிட்டோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு போலீசாரை கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது தனிப்படை உதவி ஆய்வாளர் ஆண்டோ, தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட முயன்றபோது, வீட்டின் சுவரில் குண்டு பாய்ந்துள்ளது. இதன் பின்னர், அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், துப்பாக்கி முனையில் ஐந்து பேரையும் கைது செய்து நெல்லை அழைத்துச் சென்றனர்.