ஈரோடு: வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் பிரேமலதா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னிமலை முகாசி பிடாரியூரை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு இருவரும் வெளியேறினர்.
மேலும், இருவரும் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியிலுள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த இரண்டு நபர்களை கடத்தி வைத்துக்கொண்டு பெற்றோரிடம் பணம்கேட்டு யுவராஜ், அமுதரசு, சரவணன் ஆகியோர் மிரட்டினர். இந்நிலையில் இளம் தம்பதியர் இவர்களிடம் இருந்து தப்பித்து பெருந்துறை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும்,பெண்ணின் தாயார் மஞ்சுளா அளித்தப் புகாரின் பெயரில் இளம் பெண்ணை கடத்தியதாக யுவராஜ், சரவணன், அமுதரசு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் வேறு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததாகக் கூறி கொலை செய்யப்பட்ட வழக்கில் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்த வழக்கை 2019ஆம் ஆண்டு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநருக்குத் தலா மூன்று ஆயுள் தண்டனையும் அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி, கடந்த 2022ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இருவர் இறந்து போனதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.