ஈரோடு:கடந்த இரு தினங்களாக ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60ஆவது வார்டு வெண்டி பாளையம் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலத்தில் சுமார் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக வெண்டிபாளையம் பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த மக்கள் இந்த நுழைவு பாலத்தை கடந்தே செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த நுழைவு பாலத்தின் வழியாக நாமக்கல் மாவட்டத்திற்கும் செல்லும் வாகனங்களும் சென்று வருவதால் தற்போது மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.