ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சிக்குள்பட்ட குள்ளங்கரடு பகுதியிலுள்ள 800க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான இப்பகுதி மக்கள் தினமும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.
தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்
சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் பவானி ஆறு இருந்தும் குள்ளங்கரடு பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக குள்ளங்கரடு பகுதி மக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் விவசாய தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்கு ஒருமுறை லாரி மூலம் ஒரு குடும்பத்திற்கு 5 குடம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கிராம மக்கள் கோரிக்கை
மேல்நிலைத் தொட்டி கட்டி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரையிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுத்து குடுநீர் வசதி செய்து தரவேண்டும் அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தண்ணீர் பாட்டிலுக்கு ரசீது தராத கடைக்காரர் - கண்டித்த ரயில்வே வாரிய உறுப்பினர்