சென்னிமலை பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து நிகழ்ந்த கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கைது செய்யாத காவல் துறையைக் கண்டித்து அதிமுக சார்பில் கடையடைப்பு போராட்டம் ஈரோடு:சென்னிமலை பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக நிகழ்ந்த இரட்டை கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை, திமுக ஆட்சியிலான காவல் துறையினர் இதுவரை கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று (செப்.28) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது துவங்கியுள்ள கடையடைப்பு போராட்டத்தில் சென்னிமலை பகுதிகளில் இயங்கி வரும் ஜவுளிக் கடைகள், மளிகை கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என சுமார் 700க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள், 4,000க்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும் இப்போராட்டத்தின்போது, சென்னிமலை பகுதியில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபரளைக் கண்டுபிடிக்க, காவல் துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு, விரைந்து கைது செய்து சென்னிமலை பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த துரைச்சாமி கூறூகையில், "கடந்த 2022ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி உப்பிலிபாளையத்தில் முதல் இரட்டை கொலை, கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. தனியாக இருக்கும் முதியோர்களைக் குறி வைத்து கொடூரமான முறையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் 20 நாட்களுக்கு முன்பாக அந்த சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலேயே மிகக் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பது போன்ற அறிகுறி தெரியவில்லை. இந்த நிலையில், ஒரு கொள்ளைக் கூட்டத்தின் நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் பார்த்து துரத்தியுள்ளனர்.
இந்த பகுதியில் குற்றவாளிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அதனைக் கண்டித்து, அதிமுக பொதுச் செயலாளர் ஆலோசனையின்படி, பொதுமக்களின் ஆதரவோடு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் ஆதரவோடு இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: MS Swaminathan: இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!