ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கோவில்பாளையம், மடத்துப்பாளையம், ஈஞ்சம்பள்ளி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்! - ஈரோடு
ஈரோடு: கோழி கழிவுகள், ரசாயனங்களை கீழ்பவானி வாய்க்கால் கரையில் குழி தோண்டி புதைத்த பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நஞ்சை ஊத்துக்குளி அருகே செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன ஆலையின் ரசாயன கழிவுகளை கோவில்பாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து அந்த ஆலையை சேர்ந்தவர்கள் குழிதோண்டி புதைத்துள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகிரி காவல்துறையினர் மற்றும் மொடக்குறிச்சி வருவாய்துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக புதைக்கப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.