ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஊராட்சிக்கோட்டையிலிருந்து காவிரி நீரை குழாய்கள் மூலம் ஈரோடு மாநாகராட்சிக்குக் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 54ஆவது வார்டுப் பகுதியான பழக்கார வீதிப் பகுதியில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பண்டிகை நாளின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதி குடிநீர் பயன்பாட்டிற்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூட்டுக் குடிநீர் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்களை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.