ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் புதியதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்காக, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று அப்பகுதியில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும்; உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதுமாகக் கூறி, சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னர் அருகே கூடி வாகனங்கள், வேறு பாதையில் செல்லாமல் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் காவல் துறையினர், வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் டாஸ்மாக் உயர் அலுவலர்களிடம் பேசி, இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை: டாக்டரை கைது செய்யக் கோரி போராட்டம்