ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் ரு.55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் ஓடும் பவானி ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள கோட்டுவீராம்பாளையம், பழைய மார்க்கெட், வடக்குப்பேட்டை, ராஜீவ்நகர், அக்ரஹாரம், ஐயப்பன்கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழி தோண்டி பைப்லைன் பதிக்கும் பணிகள் முடிவடைந்தது. ஆனால், பவானி ஆற்றின் தெற்கு பகுதியில் உள்ள திருநகர்காலனி, எஸ்.ஆர்.டி.கார்னர், ரங்கசமுத்திரம், புதிய பஸ்நிலையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்கு தெற்கு பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்தபோது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த இடத்தை பொது மயான இடமாக உபயோகிப்பதால் இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இடம் தேர்வு செய்யும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.