ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பூஞ்சோலை மேற்கு புதுக்காலனி பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் டிராக்டர், டிப்பர் லாரிகள் அடிக்கடி சென்று வந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியாக சோளத்தட்டு ஏற்றி வந்த டிராக்டரை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர். அப்போது சோளத்தட்டிற்கு அடியில் மணல் இருந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளனர். பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்திவரப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகமடைந்த பொதுமக்கள் டிராக்டரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பங்களாபுதூர் காவல் துறையினர், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர், வருவாய்த் துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த மணல் கடத்தல் நடைபெற்று வருவதாகவும் அதனை முற்றிலும் தடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.