நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தில்லைநகர் 2ஆவது வீதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன். இவரது தலைமையில் ஆறுமுகம், மணி, வெங்கிடுசாமி, கிருபாகரன் ஆகியோர் கல்குவாரிக்கான டெண்டரை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சென்னம்பட்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நான்கு கல்குவாரிகளுக்கான டெண்டர் கடந்த 19ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்காக நாங்கள் விண்ணப்பம், டி.டி.யுடன் சென்றிருந்தபோது எங்களை டெண்டர் எடுக்க விடாமல் அதிமுகவினர் தடுத்தனர்.
ஏலத்தை மீண்டும் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் ஏற்கனவே 13ஆம் தேதி ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் முறைகேடு நடந்ததால் மீண்டும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், 19ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் அதிமுகவினரை தவிர மற்றவர்களை கலந்துகொள்ள விடாமல் தடுத்து விட்டனர். 30 முதல் 50 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போயிருக்கக்கூடிய நான்கு குவாரிகளையும் ஆளும்கட்சியினர் ரூ.1.27 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர்.
எனவே, அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட இந்த நான்கு கல்குவாரிகளின் ஏலத்தை ரத்து செய்து மீண்டும் ஏலம் நடத்த வேண்டும், எங்களை ஏலம் எடுக்கவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : கடைகளை ரகசிய ஏலம் விட்டதற்கு வணிகர்கள் கண்டனம்!