ஈரோடு மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாளொன்றுக்கு தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,400 ஆக இருப்பதால், கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.
மாவட்ட முழுவதும் 34 இடங்களில், 13 ஆயிரத்து 400 தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சத்தியமங்கலம் வட்டாரத்தில், உக்கரம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
தடுப்பூசி போடுவதற்கு, காலை 5.30 மணி முதலே மக்கள் டோக்கன் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 6 .30 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டபோது, திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
கொட்டும் மழையிலும், மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து டோக்கன் பெற்றனர். உக்கரம் மையத்தில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், சுமார் 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட முடியாமல் திரும்பிச் சென்றனர்.
கொட்டும் மழையிலும் தடுப்பூசி போட வரிசையில் நிற்கும் பொதுமக்கள் அதேபோன்று சத்தியமங்கலத்தில் முன்பதிவு செய்தவற்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என, இருபாலருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. டோக்கன் கிடைக்காதவர்களை காவல் துறையினர் முன்பதிவு செய்துமாறு அறிவுறுத்தி, அனுப்பி வைத்தனர்.