ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், தேசிபாளையம் ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புங்கம்பள்ளி ஓடையில் நீர் வீணாகுவதைத் தடுப்பதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டம்) கீழ் 2020ஆம் ஆண்டு 7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.
புங்கன்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை நீர், இந்த தடுப்பணைக்கு வந்து சேரும். கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை நிரம்பி வழிந்தது. ஆனால், தடுப்பணை அதிகப்படியான தண்ணீரின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்துள்ளது.
இதனால் தடுப்பணையில் உள்ள தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி, தற்போது தடுப்பணை நீரின்றி வறண்டு காணப்படுகிறது. தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறும்போது நீரின் வேகம் காரணமாக தடுப்பணையின் தரைத்தளத்தின் கான்கிரீட் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தது.