ஈரோடுஅருகே சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அரிகியம், கோம்பையூர், மாக்கம்பாளையம், கோவிலூர், கோம்பைதொட்டி உள்ளிட்ட வன கிராமங்களுக்கு கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கரடு முரடான சாலையில் குரும்பூர் பள்ளம், சக்கரைப்பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும்.
சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையத்திற்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அரசு பஸ் காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் சர்க்கரைப் பள்ளம் வரை மட்டுமே செல்வதால் மாக்கம்பாளையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆபத்தான முறையில் காட்டாற்றில் இறங்கி சென்று பேருந்தில் ஏறி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மலை கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று(அக்.15) மதியம் கடம்பூர் மலைப்பகுதியில் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாக்கம்பாளையத்தில் இருந்து கோம்பையூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் மலை கிராமங்களுக்கிடையேபோக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மலை கிராம மக்கள் தரைப்பாலத்தின் மீது ஓடும் வெள்ள நீரில் ஆபத்தான முறையில் காட்டாற்றை கடந்து சென்றனர். மாக்கம்பாளையம் பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடக்கும் மக்கள்! குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப்பள்ளம் இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட டெண்டர் விடப்பட்ட நிலையில் மழை நின்று வெள்ளம் வடிந்தபின் உடனடியாக பாலம் கட்டுமான பணிகளை துவங்க வேண்டுமென மாக்கம்பாளையம் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:இரண்டாவது நாளாக மழை வெள்ளம்.. சிக்கித் தவிக்கும் அந்தியூர்...