தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் பேரவையின் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் 18ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள 10 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.
போட்டியில் கலந்துகொள்ளவுள்ள காளைகள் பரிசோதனை செய்யும் இடம், மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்யும் இடம், காளைகள் விடும் வாடிவாசல் பகுதி, பார்வையாளர்கள் அமர்விடம், காளைகள், மாடிபிடி வீரர்கள் காயமடைந்தால் அவர்களை அழைத்துச் செல்வதற்குரிய அவசர ஊர்தி வசதி, கால்நடை மருத்துவர்கள் காளைகளைப் பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மேலும் போட்டி நடைபெறவுள்ள சமயங்களில் முதலுதவி வழங்குவதற்குரிய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தயாரான நிலையிலும், போட்டியின்போது காயம்படும் காளைகளை எடுத்துச் செல்வதற்குரிய அவசர ஊர்தி, மாடுபிடி வீரர்களைக் கொண்டுசெல்லும் அவசர ஊர்தி தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவம், அவசியம் குறித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.