நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டைப் பகுதியிலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை அருகேயுள்ள பவளத்தாம்பாளையம் வரை புறவழிச்சாலை அமைக்க திட்டம் போடப்பட்டது. இதில், பவளத்தாம்பாளையத்தில் அமையவுள்ள சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த முறையான இழப்பீடு வழங்கவில்லை என அப்பகுதி விவசாயிகள், கடந்த பத்தாண்டுகளாக நிலத்தை வழங்க மறுத்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று பவளத்தாம்பாளையம் பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர், புறவழிச்சாலை திட்டத்தின் முடிவுப் பகுதியாகவுள்ள நிலத்தை உரிமையாளர்கள் அனுமதியின்றி சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர்கள், விவசாயிகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நெடுஞ்சாலைத் துறையினரின் செயலைக்கண்டித்துப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.