சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை சார்ந்த ஆறு கல்லூரிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் இடைக்கால நிர்வாகி சண்முகத்தின் விதிமீறல்கள் தொடர்பாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பசுபதி ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அதில், "பச்சையப்பன் அறக்கட்டளைக்கு அறங்காவலர் குழுவை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் அறக்கட்டளையை ஒப்படைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் சண்முகத்தை நியமித்து ஆணையிட்டது. அதனடிப்படையில் இந்த அறக்கட்டளைக்கு தேர்தல் நடத்த நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட மூன்று மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
பச்சையப்பன் கல்லூரி இடைக்கால நிர்வாகி மீது அடுக்கடுக்கான புகார்கள்
ஆனால், இதுவரை தேர்தலை நடத்தாமல், தேர்தலை நடத்த தடையும் பெற்று வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய நீதிமன்றம் சென்று, உறுப்பினர் குழுவிற்கு தன்னை தலைவராக்கி செயல்படுகிறார். பச்சையப்பன் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு இன்னல்களை விளைவிப்பது, அவரது பேச்சை கேட்காதவர்களை பணிநீக்கம் செய்துவிடுவேன் என அச்சுறுத்தல் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.
இதனை தட்டிக்கேட்ட ஆசிரியர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அவர்களை நீதிமன்றத்திற்கு அலைய வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்துவருகிறார். கரோனா காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு மன உளைச்சல் ஏற்பட்டுள்ள இந்தச் சமயத்தில், 152 ஆசிரியர்களை கல்வித்தகுதி அற்றவர்கள் உள்ளிட்ட பொய் காரணங்களை சொல்லி பணிநீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதை தன்னிச்சையாக செய்ய அதிகாரம் கிடையாது. இவருக்கு யாரும் எந்தவித ஆணையும் வழங்கவில்லை. இவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை தவிர்த்து மற்ற பணிகளில் இடைக்கால நிர்வாகி சண்முகம் செயல்பட்டு வருகிறார் என்பதை ஊடகத்தின் வாயிலாக அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கிறேன்.
பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழுள்ள ஆறு கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை காப்பாற்ற வேண்டும். சண்முகத்தின் எல்லையை வரையறுக்க வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பொறியியல் மாணவர் கண்டுபிடித்த தானியங்கி சானிடைசர் இயந்திரம்!