கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்தாண்டு கரோனா பொதுமுடக்கத்தால் திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு கடந்த மாதம் பிப் 17ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
அதனைத்தொடந்து மார்ச் 1ஆம் தேதி சந்தனக்காப்பு அலங்காரமும், 2ஆம் தேதி கிராமசாந்தியும் நடைபெற்றன. தொடர்ந்து, 3ஆம் தேதி காப்பு கட்டுதல், பட்டத்தரசி அம்மன் பொங்கல் வைத்தல் திறப்பு மற்றும் தீ மூட்டுதல் போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து, 4ஆம் தேதியான இன்று (மார்ச்4) அதிகாலை அம்மை அழைத்தல், வாக்கு கேட்டல் நிகழ்வுகளை தொடர்ந்து திருக்கொட்டி ஏற்றப்பட்டு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் தலைமை பூசாரி சக்திவேல் முதலில் தீக்குண்டம் இறங்கி குண்டம் இறங்கும் நிகழ்வினை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து 15 நாள்கள் கடும் விரதமிருந்த பூசாரிகள், பக்தர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.