ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கிடையேயான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், 35 கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இப்போட்டியானது 10 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, கோபி கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கி, நஞ்சகவுண்டம்பாளையம், கச்சேரிமேடு பேருந்துநிலையம், நாயக்கன்காடு பகுதிக்கு சென்று மீண்டும் கல்லூரியை அடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என போட்டிகள் இரு பிரிவுகளாக நடைபெற்றது.
அதில், ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் ஆறு பேரும் அதேபோல் பெண்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் ஆறு பேரும் அகில இந்திய மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதேசமயம், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு கல்லூரி சாம்பியன் சிப் பட்டம் வழங்கப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரியைச் சேர்ந்த விஷ்ணு, டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியைச் சேர்ந்த கிருபாகரன், மணிகண்டன், கோகுல் - ஜானகியம்மாள் கல்லூரியைச் சேர்ந்த அருண், ரமேஷ் ஆகியோர் முதல் ஆறு இடங்களைப் பிடித்தனர். இவர்கள் மங்களூருவில் நடைபெறும் ஆண்களுக்கான அகில இந்திய மாரத்தான் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
அதேபோல், பெண்கள் பிரிவில் கோபி கலைக்கல்லூரியிலிருந்து திவ்யா, லீமாரோகிணி, சுகன்யா - ஜானகியம்மாள் கல்லூரியிலிருந்து பவித்ரா, திவ்யா, நிர்மலா கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீநிவிதா ஆகியோர் ஆந்திராவில் நடைபெறும் பெண்களுக்கான அகில இந்திய மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.