ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கால்நடை மருத்துவமனையை தமிழ்நாட்டின் முதன்முறையாக கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பன்முக கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் கோபிசெட்டிபாளையம், உடுமலை ஆகிய இரண்டு இடங்களில் கால்நடை மருத்துவமனை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படும்வகையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ஸ்கேன் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது" என்றார்.
மேலும், பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று சேலத்தில் ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் தொடங்கிவைக்கவுள்ளார். கால்நடை பூங்காவானது முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் உருவாக்கப்பட உள்ளது என அவர் பெருமையுடன் தெரிவித்தார்.