ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்த பச்சப்பாளி பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த தலைவர் மூப்பனாரின் பிறந்தநாளையொட்டி விவசாயிகள் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “மறைந்த தலைவர் மூப்பனார் மனிதநேயம் மிக்கவர். இயற்கை வளங்கள் இருந்தால் தான் மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதற்குப் பிறகே விவசாயிகள் மகிழ்ச்சி அடைகிற நிலை உருவாகியுள்ளது. பவானிசாகர் அணை மூன்று முறை நிரம்பி உள்ளது. அதேபோல் மேட்டூர் அணையிலும் 300 நாள்களுக்கு மேல் தண்ணீர் குறையாமல் இருந்து வருகிறது.
நேற்று (ஆக. 18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை. கரோனா பாதிப்பு குறையும் வரை பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். ஆசிரியர் தகுதி தேர்வில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும். அதில் எவ்வித மாற்றங்கள் கொண்டு வரவும் வாய்ப்புகள் இல்லை.
சித்தூர் அருகே உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என தமாக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.