சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன் (45). இவர் பழமை வாய்ந்த பொருள்கள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சித் சத்தியமங்கலம் பகுதியில் அரியவகை இரிடியம் கிடைப்பதாக மோகனிடம் கூறியுள்ளார்.
அதை நம்பிய மோகன், கடந்த 7 ஆம் தேதி தனது நண்பர்கள் கொல்கத்தா ராய், ஓட்டுநர் சுரேஷ் ஆகியோருடன் சென்னையிலிருந்து காரில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிக்கு வந்துள்ளார். அப்போது, இரண்டு காரில் வந்த ரஞ்சித் தலைமையிலான மோசடி கும்பல், தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்தி மூவரையும் கடத்தி சென்று ராஜன்நகர் அன்பு என்பவரின் தோட்டத்தில் வைத்து அடித்து உதைத்து ஒரு கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், சென்னையிலுள்ள மோகன் மனைவி வித்யா அச்சமடைந்து மோசடி கும்பல் தெரிவித்த வங்கி கணக்கில் ரூ.21 லட்சம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், கூறியபடி மோசடி கும்பல் மோகனை விடுவிக்க வில்லை. இதனால், வித்யா சத்தியமங்கலம் விரைந்து சென்று இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.