ஈரோடு:கருங்கல்பாளையம் கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ். சுமை தூக்கும் தொழிலாளியான இவர், தனது சொந்த தேவைக்காக ஆம்னி வேன் ஒன்றை வாங்கி ஓட்டி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஆம்னி வேனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழுது பார்க்கும் மையத்தில் விட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவ. 19) வேனில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதால் ஆம்னி வேனை பழுது நீக்கும் மையத்தில் இருந்து எடுத்த கனகராஜ், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக ஆம்னி வேனின் முன் பகுதியில் இருந்து கரும் புகை வெளியேற தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கனகராஜ், உடனடியாக வேனை அப்படியே நிறுத்தி விட்டு வெளியே ஓடியுள்ளார். பின்னர், அருகாமையில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இடைபட்ட நேரத்தில் ஆம்னி வேன் முழுவதும் தீ பரவியதால் வேன் முற்றிலுமாக எரிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ந தீயணைப்பு துறையினர் ஆம்னி வேனில் ஏற்பட்ட தீயை அனைத்துள்ளனர். இருப்பினும் சில நொடியில், ஆம்னி வேன் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்துள்ளது. ஆம்னி வேனில் புகை கிளப்பியதுடன் உரிமையாளர் கனகராஜ் சுதாரித்து கொண்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.