ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் அரேப்பாளையத்தை சேர்ந்தவர் தவசியப்பன் (60). ஓய்வுபெற்ற வனக்காவலரான இவர், வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து மேய்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
ஓய்வுபெற்ற வன ஊழியர் யானை தாக்கி பலி! - ஆசனூர் வனப்பகுதி
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஓய்வுபெற்ற வன ஊழியர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மாலை ஆடு, மாடுகள் வீடு திரும்பிய நிலையில், தவசியப்பன் வீடு திரும்பவில்லை. அவர் வீடு திரும்பாததால் பதட்டமான உறவினர்கள் வனப்பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் தவசியப்பனை காணவில்லை, பின்னர் இன்று காலை அரேப்பாளையம் பள்ளத்தை அடுத்த அடர்ந்த காட்டில் அவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தபோது, யானை தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
பின்னர் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி உயிரிழந்த தவசியப்பன் குடும்பத்துக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வனத்துறையினர் சார்பாக வழங்கப்பட்டது.