ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் 15க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் அனுமதி இல்லாமல் மாட்டு இறைச்சி கடைகள் செயல்படுவதாகவும், திறந்த வெளியில் மாடுகளை அடித்து துன்புறுத்தி அங்கேயே அறுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாட்டிறைச்சி கடைகள் செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.
மேலும் மாட்டு இறைச்சி கழிவுகளை வாரசந்தை வளாகத்தில் வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி மாட்டு இறைச்சிக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று(நவ-21) மாட்டிறைச்சி கடைகளை உரிமையாளர்களே தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இல்லை எனில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.