ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டம், கனகுளி பகுதியை சேர்ந்தவர் லக்ஷிமர் ரூட். இவரது மகன் திரிநாத் ரூட் (19). அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹெந்துஜ்கர் மாவட்டம், நந்தபார் பகுதியை சேர்ந்தவர் குருடா ஜெனா என்பவரது மகன் சுனில் ஜெனா (28).
இவர்கள் இருவரும், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கவுண்டனூரில் தங்கியிருந்து பெருந்துறை சிப்காட்டில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவர்கள் வேலை செய்த நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது போல் இவர்களுக்கும் வாடகை இல்லாமல் 2 மாதங்களுக்கு தங்கும் வசதி, உணவு, உடை போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்கள் இருவரும் கடந்த 1ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள அரசு தலைமை செயலகத்துக்கு போன் செய்து எங்களுக்கு உணவு உள்பட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என பொய்யாக தகவல் கொடுத்ததுடன், குறுந்தகவலும் அனுப்பியுள்ளனர்.