ஈரோடு:கடந்தபிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி B.முருகேசன் முன்பு விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். இந்நிலையில் இந்த வழக்கை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாஜக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் திட்டமிட்டு சோதனை செய்கிறது. ஏன்..? தேர்தலுக்குக் குறுகிய காலம் இருப்பதால் அச்சுறுத்தல் நடவடிக்கை பாஜக மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் பாஜக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை குறித்துக் கூறும் குற்றச்சாட்டு உண்மை, அதில் தவறு இல்லை” என்றார்.
இலங்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை ஒலிபரப்பப்படாதது குறித்த கேள்விக்கு, “இலங்கை நாடு ஜனநாயக நாடு எனச் சொல்பவர்கள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் அனைத்து தரப்பினரும் ராணுவத்தில் இடம் பெறலாம். ஆனால், இலங்கை நாட்டு ராணுவத்தில் தமிழர் எப்படிச் சேர முடியும்.
60 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் ஆட்சியில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கூட தரமானதாகக் கொடுக்க முடியவில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குவதைப் போல் அனைத்து குழந்தைகளுக்கும் உணவு வழங்க முடியவில்லை என்றால் எதற்கு அந்த திட்டம். எல்லாவற்றிலும் திராவிட ஆட்சியை எதிர்க்க நான் என்ன மனநோயாளியா. இதனால் பாஜக ரெய்டு குறித்து ஸ்டாலின் சொல்வதை வரவேற்கிறேன்.