ஈரோடு:கேரளாவில் தற்போது ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாகவும், அவ்வாறு ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கும் பணம் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக கேரளாவில் இருந்து ஈரோடு வந்த என்ஐஏ குழுவினர், இரண்டு நாட்களாக முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் கிராமத்தில் தனியாக இருந்த தோட்டத்து வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த நான்கு பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதில் திருச்சூரைச் சேர்ந்த ஆசிப் (36) என்பவர் வேலைக்கு எதும் செல்லாமல், யாருடனும் பேசாமல் தனியாக இருந்து வந்ததாகவும், அவர் தாபா ஒன்றில் வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆசிப் மீது ஏடிஎம் கொள்ளை அடித்து சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாக முன்னதாக என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 3 பேர் அருகில் உள்ள பேக்கரியில் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆசிப் அந்த வீட்டில் ஒன்பது மாதங்களாக தங்கி இருந்ததாகவும், அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆசிப், அவர் நண்பர் ஒருவர் என இருவரையும் விசாரணைக்காக கொச்சிக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனரா, அவர்கள் ஏதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டார்களா, அல்லது சதி திட்டம் தீட்டினார்களா என என்ஐஏ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!