ஈரோடு: ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் அமையும் சிப்காட்டிற்கு எதிர்த்துப் போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை செய்யாறு அருகில் சிப்காட் விரிவாக்கப் பணிக்காக 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்து வருகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள், தமிழகத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றன.
அதன் விளைவாக, அப்பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை முன்னிறுத்திதான், செய்யாறில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். உலக அளவில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்க, தமிழகம் என்ன குப்பைத் தொட்டியா?" என்று கேள்வி எழுப்பினார்.