சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மேற்கொள்ளவுள்ள களப்பணிகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் மாவட்ட வாரியாக 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கூட்டம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்றக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "வரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும். தங்களது கட்சி சார்பில் சகோதரி ஒருவர் வேட்பாளராக நிற்பார். மேலும் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் கவலை இல்லை, நாங்கள் தனித்து போட்டியிடுவோம்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம், காவல் துறை, உளவுத்துறை எல்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும். அதனால், ஆளும் கட்சிதான் இடைத் தேர்தலில் வெல்லும் என்ற மாயையை கட்டமைத்துவிடுகின்றனர். கடந்த 2 ஆண்டில் நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை. இதற்கிடையே, முதியோர் உதவித்தொகை கொடுக்க முடியாமல் உள்ளனர். ஆனால், ஓட்டுக்கு மட்டும் காசு கொடுக்கிறார்கள். எங்களிடம் கோடிகள் இல்லை. ஆனால், கொள்கைகள் இருக்கிறது.