ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள வரப்பாளையம், சாணார்பாளையம் ஆகிய இரு கிராமங்களில் பெயர் தெரியாத காய்ச்சல் பரவிவருகிறது. இக்காய்ச்சலால் அந்த கிரமங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது சாதாரண காய்ச்சலாக தொடங்கி, பின்பு கை கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனையறிந்த பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம், மருத்துவ குழுவிற்கு ஏற்பாடு செய்து அவர்களுடன் காய்ச்சல் பரவிவரும் பகுதிகளுக்கு நேரில் சென்றார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசி அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க ஏற்பாடுகளை செய்தார். பின்னர், மருத்துவ குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.