ஈரோடு:அரச்சலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் மர்ம விலங்கை கண்டுபிடிக்க 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 3 இடங்களில் கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மர்ம விலங்கை பிடிக்கும் வரை யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கிழக்கு தலவுமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த மர்ம விலங்கு இரண்டு கன்றுக் குட்டிகளை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரச்சலூர் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாடு, மர்ம விலங்கின் கால் தடத்தை சேகரித்து சென்றனர்.
இந்நிலையில், கன்றுக் குட்டிகளை இழுத்துச் சென்ற மர்ம விலங்கு, சிறுத்தை புலி அல்லது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகித்து உள்ள வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றிலும் 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.