ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியைச் சேர்ந்த நந்தகுமாருக்கு (33) சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்தியூர் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்த அவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்பவருடன் திருமணமானது. அவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி பயிர்களுக்கு உயிர் கொல்லி மருந்து தெளித்துவிட்டு பின்னர் வீட்டில் காலை நேர சிற்றுண்டி உட்கொண்டார். சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் சாப்பிட முடியாமல் பாதியிலேயே சென்றுவிட்டார். பின்னர் மாவு மில்லில் வேலைக்கு சென்ற அவர் அங்கு மதிய உணவை சாப்பிடும்போது மீண்டும் குமட்டல் எடுத்ததால் அதனை சாப்பிடாமல் கொட்டிவிட்டார்.
உடலில் மாற்றங்கள் தெரியவே கடந்த 31ஆம் தேதி அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடலில் விஷம் இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் நந்தகுமார் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தனது மனைவி தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்திருக்கலாம் என வாக்குமூலம் கூறியதாக தெரிகிறது.