நகராட்சி தலைவர் வராமல் காலங்தாழ்த்தியதால் குடியரசு தின கொடியேற்றிய ஆணையாளர் ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது ஆணையாளர் கொடியேற்றுவது வழக்கம், நகராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மற்றொரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்பதால் ஆணையாளர் கொடியேற்றுவார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டது.
இதற்கிடையே இன்று காலை நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு முன்னர் கூறியதுபோல கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் பி.ஜனார்த்தனம் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் வராமல் காலந்தாழ்த்தினர். இருப்பினும் தலைவருக்காகக் காத்திருந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் நகராட்சி ஆணையாளர் செ. செய்யது உசேன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
இந்த கொடியேற்று விழாவில் தலைவர், துணைத்தலைவர் உட்பட 16 கவுன்சிலர்கள் வரவில்லை. அதிமுக, சுயேச்சை கவுன்சிலர்கள் என 2 பேர் மட்டுமே வந்தனர். குடியரசு தின விழாவில் திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த 16 நகர்மன்ற உறுப்பினர்கள் புறக்கணித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆணையாளர் அ.செய்யது உசேனிடம் கேட்டபோது நகராட்சித் தலைவர், துணைத்தலைவர் வராததாலும் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரம் காலதாமதமாவதாகவும் கூறினேன். ஆனால் தலைவர், துணைத்தலைவர் வராத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்தில் தேசிய கொடியேற்றப்பட்டதாகவும் முன்னர் அழைப்பிதழில் ஆணையாளர் ஏற்றுவார் என்ற மரபுப்படி ஏற்பட்டது என்றார்.
இதையும் படிங்க: "திமுக விரைவில் குப்பை மேட்டிற்கு வரும்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!