ஈரோடு: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்துவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வரும் மூன்று நாட்களுக்கு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கவுள்ளார். இன்று கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தம்பாடி நால்ரோட்டில், தனது பரப்புரை பயணத்தை தொடங்கிய கனிமொழிக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதில் தொண்டர் ஒருவர் கனிமொழிக்கு வாள் வழங்கிய பின்னர் வெற்றிவேல் வீரவேல் என முழக்கம் எழுப்பினர். இன்னும் அதிமுக ஆட்சி 5 அமாவாசைக்குதான் இருக்கும் என தொண்டர்கள் முழங்கினர். அதனை தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்ட கனிமொழி, சாலையில் நடந்தபடி பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுரை வழங்கினார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி பரப்புரை மேலும் பி.மேட்டுப்பாளையம் பகுதியில் கடை நடத்திவரும் பெண்மணி, துணி கடை நடத்திவரும் பெண்களையும், ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெண்களையும் சந்தித்து நலம் விசாரித்து விடிலை நோக்கி பயணத்தின் நோக்கம் குறித்த கையேடுகளை வழங்கினார். அதுமட்டுமில்லாமல், அவர்களது தொழில் வருமானம் ஆகியற்வற்றை கேட்டறிந்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.