சத்தியமங்கலம்1435 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டின் 4ஆவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், புள்ளிமான்கள், கழுதைப் புலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாகவும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் 'தலமலை' வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வருகிறது.
அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால சூழ்நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர், கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர்.
யானைகள், புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாலையோரம் படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட வருவது வழக்கம். அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால், இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள்; யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி நடமாடும் யானைகளை எரிச்சலூட்டும் வகையில் புகைப்படம் எடுப்பதும், சப்தமிடுவதுமாக வனவிலங்குகளுக்கு இடையூறு செய்கின்றனர்.