ஈரோடு: ஈரோட்டில் நேற்று (செப்டம்பர் 1ஆம் தேதி) இரவு பெய்த மழையின் காரணமாக இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் தாயும், மகனும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு பார்க்காமல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரின் மனைவி சாலம்மா (வயது 40). இவர்களுக்கு பர்வீன் என்ற மகளும் முகமது அஸ்தக் என்ற 13 வயது மகனும் உள்ளனர். பேக்கரி கடை வைத்திருக்கும் ஜாகீர் உசேன் அதிகாலையில் வேலைக்குச் சென்றுள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக வீட்டின் மேல் கூரை சுவர் திடீரென இன்று (செப்டம்பர் 2) அதிகாலையில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாய் சாலம்மா மற்றும் மகன் முகமது அஸ்தக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.