தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைத்து உதயநிதி படம் திரையிடப்படுவதாக அண்ணாமலை புகார்! - erode election news

திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வெளியிடப்பட்ட படங்கள் அதிகம்; பட்டியில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தினமும் உதயநிதி படத்தை போடுகிறார்கள்; அதுவும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 20, 2023, 5:26 PM IST

ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைத்து உதயநிதி படம் திரையிடப்படுவதாக அண்ணாமலை புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஈரோட்டில் இடையன்காட்டு வலசு, மகாஜன பள்ளி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''திமுகவின் 517 தேர்தல் வாக்குறுதியில் 49 தேர்தல் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தென்னரசு வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றால்தான் தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றத் துவங்கும்.

மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில், 22 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 22 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்திருக்க வேண்டும் வந்ததா?'' என கேள்வி எழுப்பினார்.

''திமுகவின் எதிர்க்கட்சி வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றால் தான் திமுகவினுடைய தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் மாதம் நூறு ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 21ஆயிரம் பேர் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துகிறீர்கள், இதுவரையில் யாருக்காவது மாதம் 100 ரூபாய் வந்துள்ளதா? 22 மாதத்தில் 22,000 ரூபாய் உங்களுக்கு வந்திருக்க வேண்டும். மொத்தமாக ஒவ்வொருவருக்கும் 24 ஆயிரத்து 200 ரூபாய் இதுவரையில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் கிடைக்கவில்லை. மக்களை அடைத்து வைத்து அவர்களுக்கு காலை முதல் மாலை வரை உணவு, பணம் வழங்கப்படுகிறது.

எங்கேயும் இல்லாத அநியாயம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண வேட்பாளர் தென்னரசுவை எதிர்த்து 30 அமைச்சர்கள் களத்தில் இறங்கி உள்ளார்கள். பட்டியில் அடைக்கப்படுபவர்களுக்கு தினம் ஆயிரம் ரூபாய், மாலையில் பிரசாரம் செய்பவர்களுக்கு 500 ரூபாய் என திமுக வழங்குகிறது. தென்னரசு வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வதால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடாது. ஆனால், நாட்டு மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வெளியிடப்பட்ட படங்கள் தான் அதிகம். பட்டியில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தினமும் உதயநிதி படத்தை போடுகிறார்கள் அதுவும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி காற்றில் இருந்து மின்சாரம் தயாரித்த காலம் போய் காற்றில் இருந்து காசை உருவி வருகிறார். நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறிய திமுக தற்போது 80 சதவிகிதம் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரே நாளில் 9 கொலைகள் நடைபெற்றுள்ளன. மேலும் பெண்களுக்கு இந்த ஆட்சியில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முகமூடி போட்டு கொலை செய்தவர்கள், தற்போது தைரியமாக முகமூடி அணியாமல் வலம் வருகின்றனர்.

தற்போதுள்ள எழுச்சியைப் பார்த்தால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் இசைஞானி இளையராஜாவை சாதியைச் சொல்லி திட்டியுள்ளார். அதேபோல், இந்த தொகுதியில் உள்ள அனைவரையும் தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வைகோ அவர்களை கூட மிக தரக்குறைவாக பேசியுள்ளார். அதனை மனதில் வைத்துக்கொண்டு வைகோவுக்கு சூடு சொரணை இருந்தால் இந்த தேர்தலில் பிரசாரம் செய்யக்கூடாது. ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்துக்கொன்ற சம்பவம் பற்றி இதுபற்றி முதலமைச்சர் வாய் திறக்கவே இல்லை'' எனப் பேசினார்.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் வசூல்.. தேர்தலில் பட்டுவாடா.. செந்தில் பாலாஜி நூதனம்.. ஜெயக்குமார் புகார்..

ABOUT THE AUTHOR

...view details