ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி லில்லி. இவர் அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே ஓம் சக்தி மலர் நிலையம் என்ற பூக்கடையை பல ஆண்டுகளாக நடத்திவருகிறார். அண்ணாமர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சத்தியவதி அங்கிருந்து பூக்கடையைக் காலி செய்யும்படி நான்கு அடியாட்களை வைத்து லிலியை பலமுறை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு ஈரோடு சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சத்தியவதி, திமுக பிரமுகர் அக்னி சந்துரு ஆகிய இருவரும் 35க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் பூக்கடைக்கு இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பூக்கடைக்குள் நுழைந்து பூஜைப் பொருள்கள், பூ வகைகள், டிவி, டேபிள், கூலர், சேர் உள்ளிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அடித்து நொறுக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.