சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்துவருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது வேளாண் தோட்டத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (40) என்ற விவசாயி 2 ஏக்கரில் வாழைப்பயிர் செய்துள்ளார். வனப்பகுதியில் இருந்துவந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து, அறுவடைக்குத் தயாராக இருந்த வாழையைக் கடித்துச் சேதப்படுத்தியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி குரங்களை விரட்ட முயற்சித்தார், ஆனால் குரங்குகள் தொடர்ந்து வாழையை நாசம் செய்தன. இதில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான வாழை முற்றிலும் சேதமடைந்தது. இதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிடப்படுகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்துவரும் குரங்குகளை வனத் துறையினர் கூண்டு வைத்துப்பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் மெட்ரோ ரயில் - அரசிடம் விளக்க பெற நீதிமன்றம் உத்தரவு