ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பகவதிநகர், கொண்டையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையினால், வேதபாறை காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதிகளில் உள்ள தரைப் பாலங்களை மூழ்கடித்தது. இதனால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மேலும், கணக்கம்பாளையம் பகுதியில் வேதபாறை ஓடையின் அருகில் தாழ்வான பகுதியில் வசித்துவந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்ட வருவாய் துறையினர் அவர்களை பாதுகாப்பாக சமூதாய நலக்கூடத்தில் தங்கவைத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் இந்நிலையில், அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் எவ்வாறு புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார். அதனைத் தொடர்ந்து நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய், வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினார். மீண்டும் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: குடிமராமத்துப் பணிகளுக்காக மாநில அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு!