ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் சுமார் 100 வீடுகள் பழுது நிவர்த்தி செய்தல் மற்றும் சமுதாய கூடம், மேல்நிலை தொட்டி பழுது நிவர்த்தி செய்தல், புதிதாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றறார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், “சமத்துவபுரம் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட கனவு திட்டம். இந்திய துணை கண்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு திட்டமாக இந்த சமத்துவபுரம் அமைந்துள்ளது. ஜாதி, மத மோதல்களை தவிர்த்து அனைவரும் சகோதர, சகோதரிகளாக ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று அளவோடு வாழ்கின்ற என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த சமத்துபுரம் கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
அதற்கு வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, மனித நேயம் மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இறுதி வரை தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காக அர்ப்பணித்து வந்த தந்தை பெரியார் பெயரில் பெரியார் சமத்துவபுரம் அமைத்து அதில் தந்தை பெரியார் உருவ சிலைகளை அமைத்து பெருமை சேர்த்தார்.
இன்று தமிழ்நாட்டில் 238 சமத்துவபுரங்கள் உள்ளன. அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்தவில்லை. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் ஏற்கனவே இருந்த சமத்துவபுரங்களை சீரமைக்க உத்தரவிட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிசாமி காலத்தில் இந்த சமத்துவபுரங்கள் கண்டு கொள்ளப்படவில்லை. இந்த திட்டம் தொடரவும் இல்லை, சமத்துவத்தை பற்றி அவர்கள் கவலைப்படவும் இல்லை.
ஆனால் இப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், இந்த சமத்துவபுரங்களை சீரமைக்க வேண்டும் என முடிவெடுத்து முதல் கட்டமாக 2021- 22 நிதி ஆண்டில் 145 சமத்துபுரங்கள் சீரமைக்க 190 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத் தொடர்ந்து பழுது பார்க்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2011 ஆட்சிப் பொறுப்பில் இருந்து கலைஞர் அந்த சமயத்தில் 5 சமத்துவங்கள் கட்டி முடிக்கப்பட்டு, விழா கண்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
கடந்த ஆட்சியில் மக்களுக்கு வழங்காமல் இருந்த 5 சமத்துவபுரங்களில் விழுப்புரம், சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு சமத்துவபுரங்களை முதலமைச்சரே நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து திருவள்ளூர், திருச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளது. கலைஞரை சமூக விஞ்ஞாணி என்றே கூறலாம்.
ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் மின்சாரம் வானொலி மின்சார விளக்கு போன்ற கண்டுபிடித்ததை போன்று நாட்டின் வளர்ச்சியில் தடை போடுகின்ற சக்தியாக இருக்கின்ற ஜாதிமத மோதல்களை தடுக்க அனைவரும் சமமாக சகோதரர் சகோதரியாக வாழ வேண்டும், அந்த பிளவுகளை, இடைவெளியை போக்குகின்ற வகையில் அவர் உருவாக்கியது தான் பெரியார் நினைவு சமத்துவபுரம்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் இது அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் எந்தெந்த சமுதாயங்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு என்பது ஆய்வு செய்து நெறிமுறைகளின் படி வீடு ஒதுக்கிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையில் அரசு பணிகளில் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது கடந்த ஆட்சியை குறை சொல்லி அதை வைத்தே காலத்தை கடத்தும் நோக்கம் நமது முதலமைச்சருக்கு இல்லை. துறை வாரியாக காலி பணியிடங்களை கணக்கிட்டு,அதை நிரப்புவதற்கு கடும் நிதி நெருக்கடியிலும் செய்து வருகிறார்" என்றார்.
இதையும் படிங்க:ஈ.பி.எஸ். குறித்து கருத்து வெளியிட அறப்போர் இயக்கத்திற்கு இடைக்காலத்தடை