ஈரோடு மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி 14 இடங்களிலும், திமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது.
இதையடுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்வுசெய்யும் மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் கலந்துகொள்ளும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தவிர யாரும் தேர்தல் நடைபெற்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த மறைமுகத் தேர்தலில் ஆறாம் வார்டு அதிமுக உறுப்பினர் நவமணி கந்தசாமி மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். இவருக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.