ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கரோனா நிவாரணத் தொகை 4 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியும், அதனை அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் வழங்கியதாகவும் தெரிவித்தார். 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு அதிமுக சென்று விட்டதாக குற்றம் சாட்டிய அவர், மகளிருக்கு கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் எங்கு என்று தான் கேட்கிறார்கள் என எதிர்க் கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து, தான் வாக்குறுதி கொடுப்பதாக கூறிய அமைச்சர் உதயநிதி, ஆறு மாதத்திற்குள் பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றார். மேலும் 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார் என்றும், அந்த நேரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று மிகப்பெரிய விழாவை அதிமுக - பாஜக நடத்தியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து ஒரு செங்கலை எடுத்து காண்பித்த அமைச்சர் உதயநிதி, இதற்கு 300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்ய சென்ற ஜேபி நட்டா, 90 சதவீத வேலை முடிந்துவிட்டதாக பேட்டி அளித்ததாக கூறினார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒரே ஒரு கல் மட்டும்தான் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் எனவும் தெரிவித்தார்.