ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி, பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கும் வீடியோ ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் திருமங்கலம், ஏற்காடு மற்றும் அரவக்குறிச்சி பார்முலாவையே மிஞ்சிய பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இதில், வாக்காளர்களை அடைத்து வைத்தது முதல், தினமும் ஆயிரம் ரூபாய், பிரியாணி, மது, வெள்ளி கொலுசு, குங்கும சிமிழ், மிக்சி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களும் பிரதான கட்சிகள் வழங்கியதாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளியாகின. இவைகளுக்கு மத்தியில் ஆளும் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்தால், கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களை மாதம் ஒரு முறை சந்திப்பேன் என வாக்குறுதி அளித்தார். இதன் பின்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி அமைச்சரவையில் இடம் பெற்றார்.
இதனையடுத்து ஒரு மாத தாமதத்திற்கு பிறகு தனது வாக்குறுதியை நிறைவேற்றவும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அக்ரஹாரம், கருங்கல் பாளையம் மற்றும் மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனத்தில் நின்ற படியே பேசினார்.
இதனிடையே, அமைச்சர் உதயநிதியின் இந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு லாரி மற்றும் சரக்கு வாகனத்தில் பொதுமக்களை திமுகவினர் அழைத்து வந்ததாக தெரிகிறது. ஆனால், இடைத்தேர்தலின்போது ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாகவும், தற்போதைய கூட்டத்திற்கு 200 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அக்ரஹாரம் பகுதியில் நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் பணம் கொடுக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
அதிலும், இந்த பகுதி திமுக கிளைச் செயலாளர் ஒருவர், அமைச்சர் முத்துசாமியிடம் நபர் ஒருவருக்கு 300 ரூபாய் தருவதாக வாங்கி விட்டு, தங்களுக்கு 200 ரூபாய் மட்டுமே தந்ததாக புலம்பிக் கொண்டே செல்வதும் அரங்கேறி உள்ளது. அது மட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் ஒருவர் குடிபோதையில் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறுத்து ஆடி உள்ளார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் கள ஆய்வு: மாவட்ட அதிகாரிகள் அதிரடி மாற்றம்!