ஈரோடு: பெருந்துறை அருகே சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, சிப்காட் தொழிற்பேட்டை. அந்த தொழிற்சாலை வளாகத்தில் சாய தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், மாட்டுத்தீவன தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலைகள், இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், அப்பகுதியில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட சாயம், தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீரானது சுத்திகரிக்கப்படமால் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நீரைப் பயன்படுத்திய பொதுமக்கள் புற்று நோய், எலும்பு தேய்மானம், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்படைந்துள்ளதாகவும், மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீரோடைகளும், குளங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளிக்கின்றனர்.
இதனை எதிர்த்து, அப்பகுதி மக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, ஆலை நிர்வாகம் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டப்பட்டு இருந்தது. இருப்பினும், அப்பகுதியில் இருக்கும் ஆலைகள் தொடர்ச்சியாக சாயக் கழிவு நீரை, நீரோடைகளில் வெளியேற்றுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதன் பின்னர், அப்பகுதி மக்கள் பல்வேறு குழுவாகப் பிரிந்து, கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளைக் கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு, இதுவரை 6 ஆலைகளுக்கு சீல் வைத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆலை நிர்வாகம் மற்றும் அரசு இணைந்து 40 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியீட்டு விழாவில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற இந்த அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இத்திட்டத்திற்கான அறிவிப்பை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார்.