ஈரோடு:காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில்கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு நாச்சியப்பா வீதி, அகில்மேடு பகுதிகளில் சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரிய அவர்கள், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினர்.