ஈரோடு:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் முத்துசாமி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி பேசியதாவாது: "தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி பெறும் நடவடிக்கைக்காக பில்டர்ஸ் அசோசியேஷன், பொறியாளர்கள் சங்கம், ஆர்கிடெக்ட், பள்ளி கல்லூரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரிடம் கருத்துக்களை கேட்க இருக்கின்றோம். பின்னர் விதிமுறைகளில் நடைமுறை சிக்கல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக அவர்களிடம் கருத்துக்களை பெற்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவர்களையும் அழைத்துப் பேசி கருத்துக்களை கேட்க இருக்கின்றோம். இனிமேல் வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுவதை கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு எனவும், கட்டிட உரிமையாளர்களை விட இவர்களுக்கு தான் இந்த பொறுப்பு உள்ளது.
கட்டிடம் கட்ட வரைபட அனுமதி தேவை என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை, இது குறித்து அவர்கள் கவலைப்படுவதும் இல்லை, கட்டிட வரைபட அனுமதி மிக முக்கியமானது, இது பொது மக்களுக்கு பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும். அனுமதி பெறாத கட்டிடங்கள் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிமுறைகளை செய்திருக்கின்றோம். இதுகுறித்து பொதுமக்களிடமும் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்று கூறினார்.