ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 11 அம்மா உணவகங்களிலும் கடந்த சில நாள்களாக மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குள்பட்ட 11 அம்மா உணவகங்களுக்கும் 3.5 டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி அம்மா உணவகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ச, “ஈரோடு மாவட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 70 நபர்களும் முற்றிலும் குணமடையச் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 21 நாள்களாக எவ்வித கரோனா நோய் பாதிப்பும் கண்டறியப்படாத மாவட்டமாக இருக்கின்றது.
கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்குவதற்கு உதவி புரிந்திட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைத்த மக்கள் பங்களிப்பு முக்கியமானது என்றும், வருகிற 17ம் தேதி வரை மாநிலம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக மூன்று வேளைகளும் உணவு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை வருகிற ஜூன் மாதத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கரோனா நோய் பாதிப்புகள் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டதற்குப் பிறகு தேர்வுக்கான அட்டவணை வெளியிடுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பின் அறிவிப்பு வெளியிடப்படும்.